புதுடில்லி: இந்தியாவில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணியில் நாடு முழுவதும் சுமார் 32 லட்சம் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான புதிய டிஜிட்டல் தளங்கள் மற்றும் பிரசார உருவச் சின்னங்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027’ தொடர்பான பணிகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
இந்த கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடுகளின் பட்டியல் தயாரித்தல் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 33 கேள்விகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். அந்த கட்டத்தில் மக்களின் சமூக மற்றும் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை ஆன்லைன் மூலம் தாங்களே பதிவேற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 16 மொழிகளில் செயல்படும் சிறப்பு இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி வருவதற்கு முன்பே மக்கள் தங்கள் விவரங்களை இந்த இணைய தளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அந்த தகவல்களை கணக்கெடுப்பாளர்கள் சரிபார்த்து உறுதிப்படுத்துவார்கள்.
இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நான்கு முக்கிய டிஜிட்டல் வசதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.
அதில் ‘ஹவுஸ் லிஸ்டிங் பிளாக் கிரியேட்டர்’ என்ற செயலி செயற்கைக்கோள் உதவியுடன் குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு வீடுகளின் பட்டியலை டிஜிட்டல் முறையில் உருவாக்க உதவும்.
‘ஹெச்.எல்.ஓ. மொபைல் செயலி’ மூலம் கணக்கெடுப்பாளர்கள் மக்களிடமிருந்து தகவல்களை சேகரித்து பாதுகாப்பாக பதிவு செய்ய முடியும்.
‘செல்ப் எனுமெரேஷன் போர்ட்டல்’ என்ற தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் நேரடியாக பதிவு செய்ய முடியும்.
‘சென்சஸ் மேனேஜ்மென்ட் அண்டு மானிட்டரிங் சிஸ்டம்’ என்ற தனிப்பட்ட டிஜிட்டல் இணைய தளம் கணக்கெடுப்பு பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை ‘சென்டர் பார் டெவலப்மெண்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’ நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிகளில் சுமார் 32 லட்சம் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027’ திட்டத்திற்கான பிரசார உருவச் சின்னங்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். கணக்கெடுப்பு பணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஆண் உருவத்திற்கு ‘விகாஸ்’ என்றும் பெண் உருவத்திற்கு ‘பிரகதி’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
