முகமது யூனுஸ் அரசு நீண்ட காலம் நீடிக்காது; வங்கதேச வன்முறை குறித்து அசாம் முதல்வர் கருத்து
புதுடில்லி: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், தற்போதைய ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு கவலையளிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் என அவர் கூறினார். ‘சிக்கன் நெக்’ என அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடம் இந்தியாவின் மிக முக்கியமான ராஜதந்திரப் பகுதியாக இருப்பதாகவும், வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த குறுகிய பகுதியின் இருபுறமும் வங்கதேசம் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழித்தடத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.
முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், தற்போதைய ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு கவலையளிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளதாகவும் ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா இதற்கு முன் எதிர்கொண்ட சவால்களைவிட, இன்றைய நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பிரச்னைகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைகளே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அசாம் மாநிலத்தின் மக்கள்தொகையில் தற்போது 40 சதவீதம் பேர் வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், சுதந்திரத்தின் போது இது 10 முதல் 15 சதவீதமாக மட்டுமே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, வங்கதேசம் பயங்கரவாதத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.
