Skip to content Skip to footer

மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு மறைமாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு வழக்கில் 1966ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னும் ரோமன் கத்தோலிக்க மிஷனின், தற்போது மதுரை ஆர்ப்பிஷப்பகம் – மதுரை மறைமாவட்ட பிஷப் இல்லம் வசமே உள்ளது.

மதுரை புரோக்ரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரீஸ்’ என்ற பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நிலத்தில் கட்டுமானத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர், மண்டல இணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர், மறைமாவட்ட பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி நவ., 25க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

 

Add Comment