சிக்கபல்லாபூர்: ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, கர்நாடகாவின் அலிப்பூர் கிராமத்தில் ஜியா பிரிவு முஸ்லிம்கள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஜியா சமூகத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனூர் தாலுகாவிலுள்ள அலிப்பூர் கிராமம் ‘மினி ஈரான்’ என அழைக்கப்படுகிறது. சுமார் 30,000 மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில், 25,000 பேர் ஜியா பிரிவு முஸ்லிம்கள் என கூறப்படுகிறது.
கமேனி மரணத்தை கண்டித்து வியாபாரிகள் கடைகளை மூடி, கருப்பு உடை அணிந்து பேரணி நடத்தினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
‘அஞ்சுமான் இ ஜபாரியா’ அமைப்பின் சார்பில் உள்ளூர் மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பலர் கமேனிக்காக பிரார்த்தனை செய்தனர். கிராமத்தினரின் கூற்றுப்படி, கமேனி 1986ஆம் ஆண்டு அலிப்பூர் வந்ததாகவும், ஈரானுடன் கிராமத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அலிப்பூரைச் சேர்ந்த பலர் தற்போது ஈரானில் தொழில் மற்றும் கல்வி தொடர்பாக இருப்பதாகவும், அவர்கள் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்ததாகவும் கூறப்பட்டது. கமேனி பெயரில் மருத்துவமனை இயங்கி வருவதாகவும், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பதற்றம் நிலவியதால், கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி. குஷால் சவுக்ஷி நேரில் சென்று நிலைமையை கண்காணித்தார்.
