கோவை:
காட்பாடி அருகே ரயிலில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஷேக் முகமது, கடந்த வாரம் சென்னையிலிருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை நோக்கி பயணம் செய்துள்ளார். அந்த பயணத்தின் போது, ரயிலில் உடன் சென்ற மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை மாணவி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த பதிவுகளுடன் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவி எடுத்த வீடியோ பதிவுகள் மற்றும் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவலர் ஷேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
