மாணவர்களை ஏமாற்ற பார்க்கிறதா திமுக அரசு – இபிஎஸ்
சென்னை:
மாணவர்களுக்கு பொம்மை லேப்டாப் வழங்கி, அவர்களை ஏமாற்றும் முயற்சியில் ஸ்டாலின் மாடல் அரசு ஈடுபட்டுள்ளதா என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு அறிவுப் பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தது இலவச லேப்டாப் திட்டம் என குறிப்பிட்டுள்ளார். அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த இளைஞர்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கேட்டு மகிழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தற்போதைய திமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாததால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தங்களை வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் இருந்த அரசு, தேர்தல் நெருங்குவதை உணர்ந்தவுடன், நாடகமாடும் வகையில் தற்போது இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். கல்வி ஆண்டின் நடுப்பகுதியில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஏன் என்றும், அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏன் வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயன்படும் அளவிலான லேப்டாப்கள் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். தரமற்ற லேப்டாப்கள் மூலம் மாணவர்களை ஏமாற்ற முயற்சி நடைபெறுகிறதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் காலத்துக்கான கண்துடைப்பாக லேப்டாப் வழங்குவது போல நடிப்பதற்கும், கல்வி மேம்பாட்டுக்காக தொடர்ந்து லேப்டாப் வழங்கிய தனது ஆட்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “#WhereIsOurLaptop” என்று கேட்பது தானல்ல; நான்கரை ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களே இந்த கேள்வியை எழுப்புகிறார்கள் என்றும், அவர்களுக்கு முதல்வர் உரிய பதில் அளிப்பாரா என்றும் இபிஎஸ் வினவியுள்ளார்.
