சென்னை: மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப் போவதாக அறிவித்து, மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என அனைவரும் நம்பினர். ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப் போவதாக முதல்வர் தற்போது மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது கூட ஒரு ஏமாற்று அறிவிப்பே என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய சுமார் 60,000 ரூபாய் ஊக்கத் தொகை எப்போது கிடைக்கும் என்பதே தெரியாத நிலை தொடர்கிறது. இவ்வாறு தொடர்ந்து வெற்று வாக்குறுதிகளை அளித்து யாரை ஏமாற்றலாம் என்று முதல்வர் எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முதல்வருக்கு பிடித்ததாகக் கூறப்படும் ‘பேரு பெத்த பேரு, தாக நீலு லேது’ என்ற தெலுங்குப் பழமொழி, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
