மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்! காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு
மும்பை:
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ. தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் என மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், மஹாயுதி கூட்டணி 212 அமைப்புகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு மாறாக, காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 48 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்து மஹாயுதி கூட்டணியாக ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2 மற்றும் 20ம் தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ் – உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்த மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நகராட்சிகள் முடிவு
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 246 நகராட்சிகளில் மஹாயுதி கூட்டணி 178 இடங்களை கைப்பற்றியது. இதில், பா.ஜ. 100 நகராட்சிகள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 45 நகராட்சிகள், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 33 நகராட்சிகளை வென்றன.
மஹா விகாஸ் அகாடி கூட்டணி 41 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் 26, உத்தவ் சிவசேனா 7, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் 8 நகராட்சிகளில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 27 நகராட்சிகளை பிற கட்சிகள் கைப்பற்றின.
நகர பஞ்சாயத்துகள்
42 நகர பஞ்சாயத்துகளில், மஹாயுதி கூட்டணி 34 இடங்களை கைப்பற்றியது. இதில், பா.ஜ. 23, சிவசேனா 8, தேசியவாத காங்கிரஸ் 3 பஞ்சாயத்துகளை வென்றன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி 7 நகர பஞ்சாயத்துகளையே பெற்றது.
கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் மஹாயுதி கூட்டணி தன் அரசியல் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட தீவிர பிரசாரம் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு மாறாக, மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததே தோல்விக்குக் காரணமாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் காங்கிரஸ் கடுமையாக போராடினாலும், உத்தவ் சிவசேனா நிர்வாகிகள் பல இடங்களில் களத்துக்கு வரவில்லை. சரத் பவார் தரப்பு நிர்வாகிகள் தங்கள் சொந்த தொகுதிகளிலேயே கவனம் செலுத்தியதும் கூட்டணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மாநகராட்சி தேர்தல்
இதற்கிடையே, ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளின் 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி 15ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என, மஹாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா அறிவித்துள்ளார். இதனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
