மும்பை: மஹாராஷ்டிராவில் கல்வி மற்றும் அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல்வர் பிரித்விராஜ் சவான் தலைமையிலான காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, மராத்தாக்களுக்கு 16% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு, அவசர சட்டத்தை சட்டமாக்கவில்லை. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை அவசர சட்டம் மீறுவதாகக் கூறி, மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கிய அவசர சட்டம் காலாவதியானதாக மஹாராஷ்டிரா அரசு தெரிவித்தது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஜாதி மற்றும் கிரீமிலேயர் அல்லாத சான்றிதழ்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
