மும்பை: மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அரசு வெளியிட்டது.
முன்னதாக, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அவசர சட்டம் மூலம் மராத்தியர்களுக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2014 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜ – சிவசேனா கூட்டணி ஆட்சியில், அந்த அவசர சட்டம் சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றப்படாததால் காலாவதியானது. இதனுடன், 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுவதாகக் கூறி மும்பை ஐகோர்ட் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய முஸ்லிம்களுக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு செல்லாது; ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
