மறைந்த பாரம்பரிய ஓவியர் ஆர்.கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது
பந்தலூர்:
கடந்த ஆண்டு காலமான கோத்தகிரியை சேர்ந்த பாரம்பரிய ஓவியர் ஆர். கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள வெள்ளரிகோம்பை கிராமத்தைச் சேர்ந்த ஆலுகுரும்பா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆர். கிருஷ்ணன். 52 வயதான அவருக்கு, குறும்பா பாரம்பரிய ஓவியக் கலையில் செய்த பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அவர், கடந்த 30 ஆண்டுகளாக ஓவியக் கலையில் ஈடுபட்டு வந்தார். தமது சமூக மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், தேன் சேகரிப்பு, திருமணம், காடுகளில் வாழும் இயற்கைச் சூழல் போன்றவற்றை இயற்கை நிறங்களையும், ஆலம் வேர் தூரிகைகளையும் பயன்படுத்தி அவர் ஓவியமாக வடிவமைத்தார்.
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ‘எழுத்துப் பாறை’ ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு பல ஓவியங்களையும் அவர் வரைந்துள்ளார். குறும்பா ஓவியக் கலையில் செய்த பங்களிப்புக்காக, முன்னதாக பல தேசிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
ஆர். கிருஷ்ணன் கடந்த மார்ச் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மனைவி சுசீலா, மேட்டுப்பாளையம் பாக்குத் தோப்பில் கூலி வேலை செய்து வருகிறார். மூத்த மகள் வாசுகி, தந்தை மறைவுக்குப் பின்னர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். மகன் ராகுல் 9ம் வகுப்பிலும், மகள்கள் கீதா 7ம் வகுப்பிலும், கீர்த்திகா 4ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.
விருது அறிவிப்பு குறித்து சுசீலா கூறுகையில், தனது கணவர் குறும்பா ஓவியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகவும், அவர் உயிரோடு இருந்த காலத்தில் தன்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஓவியங்களுக்காக பலர் பாராட்டும் பரிசுகளும் வழங்கியதாக கூறிய அவர், இறப்பதற்கு முன் இன்னும் சில மாதங்களில் ஒரு பெரிய விருது கிடைக்கும் என கணவர் மகிழ்ச்சியுடன் கூறியதாக நினைவுகூர்ந்தார்.
தற்போது அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது குழந்தைகளின் கல்விக்குத் தேவையான உதவி கிடைத்தால் அது மேலும் மனநிறைவாக இருக்கும் என்றும் சுசீலா தெரிவித்தார்.
