மனைவி சொன்னா கேட்டுக்கணும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை:
தனது வெற்றிக்கு பின்னால் மனைவியின் பங்கு முக்கியமானது என்றும், மணமக்கள் வாழ்க்கையில் மனைவி சொல்வதை கவனமாக கேட்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் வந்தாலே தனக்கு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் ஏற்படுவதாக கூறினார். அந்த உணர்வு தனக்கு மட்டுமல்ல, அங்குள்ள மக்களுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். திருமண விழாவில் மணமக்களுடன் இணைந்து பங்கேற்று வாழ்த்துவது, குடும்ப திருமணத்தில் கலந்து கொள்வது போலவே மகிழ்ச்சியளிப்பதாகவும், அமைச்சர்கள் உட்பட அனைவரும் அந்த மனநிலையிலேயே பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நல்ல எண்ணத்துடன்…
கொளத்தூர் என்ற பெயர் கேட்டாலே சாதனைகளும், தன் பெயரும் நினைவிற்கு வருவதாகக் கூறிய முதல்வர், அந்த அளவுக்கு இந்த தொகுதியுடன் தன்னை ஒன்றிணைத்துள்ளதாக சொன்னார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, கொளத்தூர் தொகுதியை பெருமைக்குரிய பகுதியாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 234 தொகுதிகளில் கொளத்தூரை பார்க்கும் போது மற்ற தொகுதி பிரதிநிதிகளுக்கு பெருமையும், ஊக்கமும் ஏற்படுவதாக கூறிய அவர், அது நல்ல எண்ணத்தில் தான் என்றும் விளக்கினார்.
செல்லப்பிள்ளை போல…
முதல்வராக பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தாலும், கொளத்தூர் தொகுதியில் கிடைக்கும் மகிழ்ச்சி தனிச்சிறப்பானது என குறிப்பிட்டார். இந்த தொகுதியில் எப்போதும் மக்கள் வீட்டு பிள்ளை, செல்லப்பிள்ளை போல இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், மக்கள் தன்னை அந்த வகையில்தான் பார்க்கிறார்கள் என நம்புவதாகவும் கூறினார். இங்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
கொளத்தூரில் மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள், திருமண விழாக்கள் என பல்வேறு வசதிகள் அதிகமாக உள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களை முன்னேற்றும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்றும், பெண்கள் முன்னேறினால் குடும்பமும் சமுதாயமும் முன்னேறும் என்றும் அவர் தெரிவித்தார். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் தான் இருப்பார் என்றார்.
மனைவி சொன்னால் கேளுங்கள்
தனது வெற்றிக்கும் பின்னால் மனைவி தான் காரணம் என கூறிய முதல்வர், மணமக்களிடம் மனைவி சொல்வதை புரிந்து கொண்டு வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். குழந்தைகள் குறித்து அவசரப்பட வேண்டாம் என்றும், முன்பு “16 பெற்று பெருவாழ்வு” என கூறப்பட்டாலும், இப்போது “அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும்” என்பதே காலத்தின் தேவை என்றும் அவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்டி, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக வளர வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
முதல்வர் பேட்டி
கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
மடிக்கணினி வழங்கல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர், அவர் எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் எதிரி கட்சி தலைவராக செயல்படுகிறார் என்றார்.
