மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான நிதி பயன்பாடு குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய சிறப்பு உட்கூறு திட்ட நிதி, மகளிர் உரிமைத் தொகை வழங்க பயன்படுத்தப்பட்டதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தலித் விடுதலை இயக்கத் தலைவர் கருப்பையா அளித்துள்ள மனுவில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023ல் துவங்கப்பட்டு, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு தனியாக நிதி ஒதுக்காமல், எஸ்.சி., – எஸ்.டி., மக்களுக்கான மத்திய அரசு சிறப்பு உட்கூறு திட்ட நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சமூக பாதுகாப்பு மற்றும் நலத் துறை தலைப்பில் வழங்கப்பட்ட நிதி, மகளிர் உரிமைத் தொகை என்ற துணைத் தலைப்பின் கீழ் மடைமாற்றம் செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவிலான நிதி இத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதி மாற்றத்தால், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கிய நிதி மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
