மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவருக்கு அமைச்சர் மூர்த்தி செங்கோல் வழங்கினார்.
உரையின்போது, பூத் அளவிலான நிர்வாகிகளை முன்கூட்டியே நியமித்து, தேர்தல் களப்பணிகளை திமுக தீவிரமாக மேற்கொண்டு வருவதாக முதல்வர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு மாதங்களில் பல மாநாடுகள் நடத்தப்பட்டதையும், லட்சக்கணக்கான நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசியதையும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து பேசும்போது, தமிழகத்தில் வாக்குகள் நீக்கப்படாமல் பாதுகாக்க திமுக நிர்வாகிகள் உழைத்ததாக கூறினார். “பூத் அளவில் தேர்தலுக்கு முழுமையாக ஆயத்தமாகும் கட்சி திமுகவைத் தவிர இந்தியாவில் வேறு இல்லை” எனவும் அவர் வலியுறுத்தினார்.
வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் இலக்குடன் செயல்படுவதாக தெரிவித்த முதல்வர், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மதுரைக்கு வர உள்ளதை நினைவுபடுத்திய அவர், “மெட்ரோ சேவையை பற்றி கவலைப்படுகிறவர்கள், மதுரை மற்றும் கோவைக்கு ஏன் மெட்ரோ வழங்கவில்லை என மக்கள் கேள்வி கேட்க வேண்டும்” என்றார்.
அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்த முதல்வர், “ஆட்சியல்ல, பதவியல்ல; உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம். வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட கோரிப்பாளையம் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘மறவோம்’ நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். காந்தியின் கொள்கைகள், மதநல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
