சென்னை: தமிழக பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அறிக்கையில் கூறப்பட்டதாவது: செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள வாசகங்கள், அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அதில் பிரச்னையோ ஆட்சேபனையோ இல்லை.
ஆனால், அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதி பட்டியலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. மாற்று மதத்தை பின்பற்றுவோர் அதை மறைத்து, பட்டியலின தொகுதியில் போட்டியிட்ட விவகாரங்களில், உச்ச நீதிமன்றம் தகுதியிழப்பு செய்துள்ள தீர்ப்புகள் உள்ளன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டது தெளிவாகிறது. தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபட்ட அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
