மணல் கொள்ளையை தடுப்பது கலெக்டர்களின் பொறுப்பு – சென்னை ஐகோர்ட்
சென்னை:
மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் குழுக்கள், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாபியா போல் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத மணல் கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கில், புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், மணல் மற்றும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2020 முதல் 2025 நவம்பர் வரை மொத்தம் 1,439 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்டு, 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ஏன் அறிக்கையில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினர். ரூ.5 கோடி மதிப்புள்ள கனிம வள கொள்ளை வழக்கில் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதால் என்ன பயன் என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்தனர்.
மேலும், அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி, மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக் கும்பல்கள் மாபியா போல செயல்படுவதாக நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர். சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான முழுப் பொறுப்பு மாவட்ட கலெக்டர்களுக்கே எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடர்பாக புகார் அளிக்கத் தவறும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை குறித்து புகார் அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கொள்ளையை தடுக்கும் வகையில் அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் முடித்து வைத்தது.
