காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில், மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கூடுதல் அம்சங்களுடன் வேறு பெயரில் புதிய திட்டமாக மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் மகாத்மா காந்தி பெயரை தேஜ கூட்டணி அரசு நீக்கிவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் என்ற பெயரில் காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கத்துடன் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கதர், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும், தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் நெசவாளர்கள் மற்றும் கிராமத் தொழில் துறையினர் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும் நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
