பிரயாக்ராஜ்: கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மகர பவுர்ணமியையொட்டி உத்தர பிரதேசத்தின் திரிவேணி சங்கமம் பகுதியில் 2.10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகர மேளா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகர பவுர்ணமி எனப்படும் தை பவுர்ணமி நாளான நேற்று, முக்கிய நிகழ்வான புனித நீராடல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர்.
மாலை 6 மணி வரை, ஒரே நாளில் 2.10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். காலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியபோதும், பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் புனித நீராடலில் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் மணீஷ் குமார் வர்மா கூறுகையில், மகர மேளாவில் கல்பவாசம் அனுசரித்து வரும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஒரு மாத கால விரதத்தை மகர பவுர்ணமி நீராடலுடன் நிறைவு செய்வதாக தெரிவித்தார். அனைத்து படித்துறைகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முழு மேளா பகுதியும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வரும் 15-ம் தேதி மஹா சிவராத்திரியன்று நடைபெறும் புனித நீராடலுடன் மகர மேளா நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
