டெஹ்ரான்:
ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடைபெறும் வன்முறை அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
ஈரானில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து, ராபர்ட்டா மெட்சோலா தலைமையிலான ஐரோப்பிய பார்லிமென்ட் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானிய மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில், அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் மக்கள்மீது அரசு தரப்பில் நடைபெறும் மிருகத்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்ப்புக் குரலை அடக்க அரசின் அனுமதியுடன் நடைபெறும் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மக்கள் தனியாக இல்லை என்றும், அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக ஐரோப்பிய பார்லிமென்ட் உறுதியாக ஆதரவாக நிற்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
