சென்னை: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் வெளியிடப்பட இருந்த புத்தகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த புத்தகத்தை வெளியிட முயன்ற கீழைக்காற்று பதிப்பகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை தொடர்ந்து, அவரை விமர்சிக்கும் விதத்தில் இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புத்தகத்தின் தலைப்பும் விளம்பரங்களும் சர்ச்சைக்குரியதாக இருந்து, சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் இந்த புத்தகம் நீதித்துறையின் நேர்மை மற்றும் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் இருப்பதாக கூறி, வழக்கறிஞர் பி.ஜெகநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, “பொறுப்பில் இருக்கும் நீதிபதியை குறித்து இவ்வாறு பேசுவது எப்படி அனுமதிக்க முடியும்?” என கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை குறித்த அந்த புத்தகத்தை வெளியிட தடை விதித்த நீதிமன்றம், புத்தகத்தை பறிமுதல் செய்யவும், அதை விற்பனை செய்யாமல் இருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், அந்த புத்தகத்தை வெளியிட முயன்ற பதிப்பகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
