பொய் செய்தி பரப்பும் வங்கதேச ஊடகம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு
புதுடில்லி:
ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை, வங்கதேச ஊடகங்கள் திரித்துக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் மூலம் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி முக்கிய மாணவர் தலைவராக அறியப்பட்டார். அவர் ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர்–இளைஞர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதுடன், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சிக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி ஷெரீப் ஓஸ்மான் சுடப்பட்டு தலையில் காயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அவர், 18ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் பல நகரங்களில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது.
இந்த கலவர சூழலை பயன்படுத்தி, திபு சந்திர தாஸ் என்ற ஹிந்துத் தொழிலாளியை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி கொன்றது. பின்னர் அவரது உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு எரித்ததுடன், தேசிய நெடுஞ்சாலையில் போட்டு மீண்டும் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டத்தை வங்கதேச ஊடகங்கள் தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு 20 முதல் 25 இளைஞர்கள் மட்டுமே கூடினார்கள் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் திபு சந்திர தாஸ் கொலைக்கு எதிராக கோஷமிட்டதுடன், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். யாரும் தூதரக வேலியை தாண்ட முயற்சிக்கவில்லை என்றும், பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில், தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க இந்தியா உறுதியாக இருப்பதாகவும், வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கதேச அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், சிறுபான்மையினர்மீது தாக்குதல் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திபு சந்திர தாஸை கொடூரமாக கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
