திருவனந்தபுரம்: சமூக வலைதளத்தில் வெளியான சர்ச்சை வீடியோ காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான கேரள நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் (42) என்பவர் அங்குள்ள ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் கோவிந்தபுரத்தில் வசித்து வந்த அவர், கடந்த 14-ஆம் தேதி மாநில அரசு பேருந்தில் கண்ணூருக்கு பயணம் செய்துள்ளார். அதே பேருந்தில் பயணம் செய்த 35 வயதுடைய ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், பேருந்தில் பயணிக்கும் போது தீபக் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது தொடுதல் தற்செயலானது அல்ல என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளான தீபக், கடந்த 18-ஆம் தேதி காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னர், சமூக வலைதள புகழுக்காக ஷிம்ஜிதா முஸ்தபா தீபக்கின் நற்பெயரை கெடுத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தீபக்கின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக ஷிம்ஜிதா முஸ்தபா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனிடையே தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா முஸ்தபாவை, கோழிக்கோடு மாவட்டம் வடகாரா பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர்.
