தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தை மையமாக வைத்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தமிழகம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலம் என திமுக அரசு தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய நிலை உருவாக்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு எதிர்வினை தெரிவித்து, அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திமுக நிர்வாகிகள் தொடர்புடையதாக கூறப்படும் பல சம்பவங்களை சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை பாலியல் குற்றங்களில் திமுக நிர்வாகிகள் சிக்கியுள்ள நிலையில், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதல்வர் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, அந்தக் கூற்று முழுக்க முழுக்க பொய்யானது என குற்றம்சாட்டியுள்ளார்.
