மலப்புரம்:
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பெண்களை குறித்து அவதூறாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 9 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்தது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.
இந்த சூழ்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சையத் அலி மஜீத், 47 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற பேரணியின் போது, பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தி போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர், ஓட்டுக்காக பெண்களை முன்னிறுத்தி அரசியல் செய்வது சரியல்ல எனக் குறிப்பிட்டதுடன், பெண்கள் குறித்த தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மேலும், இந்த கருத்துகள் முஸ்லிம் லீக் கட்சியினரை மட்டுமின்றி, அவரது சொந்த கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் உள்ள பெண்களையும் அவமதிப்பதாக அமைந்துள்ளதால், கட்சிக்குள்ளும் வெளியிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
