மும்பை / பெங்களூரு: கர்நாடக மாநிலம் வேமகலில் அமைக்கப்பட்ட எச்125 இலகுரக ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் இணைந்து திறந்து வைத்தனர்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சந்திப்பின் போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டு நிருபர் சந்திப்பில் பிரதமர் மோடி, இந்தியா – பிரான்ஸ் உறவை மக்களுக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி, விண்வெளி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதாக கூறினார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கிடையிலான பரிமாற்றங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பிரான்சில் சுவாமி விவேகானந்தர் கலாசார மையம் அமைக்கப்படும் என்றும், உயரமான பகுதிகளில் பறக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இந்தியா – பிரான்ஸ் உறவு நம்பிக்கை மற்றும் நல்ல நோக்கங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றார். பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதாகவும், இருநாடுகளும் உலக ஸ்திரத்தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடரும் என்றும் உறுதியளித்தார்.
இதனிடையே, டாடா ஏர்பஸ் நிறுவனத்தின் எச்125 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் ஆலையை இரு தலைவர்களும் திறந்து வைத்தனர். தனியார் துறையின் பங்குடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை இதுவாகும்.
ஆலை திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபரும் ஒரே காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படத்தை பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
