சென்னை: தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் “புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை போன்றவை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தவெக சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், “அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமின்றி பயணம் வழங்கப்படும். மேலும் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்,” என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை என்று சொல்வார்களே, அதுபோலத்தான் இது என நான் கருதுகிறேன். திமுக கூட்டணி தற்போது வலுவாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு பல புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. அவற்றை எதிர்கொள்வதற்காக இத்தகைய வாக்குறுதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது எந்த வகையிலும் திமுக கூட்டணியின் செல்வாக்கை பாதிக்காது.
மேலும் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
