மும்பை: உலகளாவிய புதுமை உருவாக்கத்தில் இந்தியா முக்கிய தலைமை வகிக்கிறது என பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்தியா–பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “உலகுக்கு புதுமையை உருவாக்குவதில் இந்தியா வெறும் பங்கேற்பாளர் அல்ல. பல முன்னணி உலக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர். இது இந்தியாவின் திறன் மற்றும் புதுமை ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்தியா புதுமைகளை உருவாக்குகிறதா என்பது இனி கேள்வி இல்லை; இந்தியாவுடன் இணைந்து யார் புதுமைகளை உருவாக்குகின்றனர் என்பதே கேள்வி. அதற்கு பிரான்ஸ் உறுதியான பதிலாக உள்ளது. நாங்கள் இந்தியாவுடன் நீண்டகால ஒத்துழைப்பை விரும்புகிறோம்,” என்றார்.
பாதுகாப்புத் துறையை குறிப்பிட்ட அவர், “மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் உறுதியான கூட்டாளியாக உள்ளது. அடுத்த தலைமுறை இயந்திரங்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கத்தில் இருநாடுகளின் ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. நிலம், கடல், வானம் மட்டுமல்லாது விண்வெளித் துறையிலும் இந்த கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது,” என கூறினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்தியா–பிரான்ஸ் உறவில் இந்த ஆண்டு சிறப்பானதாகும். மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் வலுப்படும். தொழில்துறை ஒத்துழைப்பு விரிவடையும். 2026 ஜூனில், சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு தீர்வு வழங்கும் சிறந்த இந்திய ஸ்டார்ட் அப்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம்,” என்றார்.
