புதுடில்லி:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் பிரியங்கா காந்தியை பிரதமராக ஆதரிக்கின்றனர் என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில், பிரியங்கா தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாக கூறினார். தனது பாட்டி **இந்திரா காந்தி**யிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், அதே நேரத்தில் தனித்திறமைகளுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரியங்காவில் இந்திராவின் பிரதிபலிப்பை மக்கள் காண்கிறார்கள் என்றும், அவருக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மக்களை பாதிக்கும் பிரச்னைகளை தொடர்ந்து பிரியங்கா முன்வைத்து வருவதாகவும், அதனால் காங்கிரஸ் எம்பிக்கள் அவரை வருங்கால பிரதமராக ஆதரிக்கிறார்கள் என்றும் ராபர்ட் வாத்ரா தெரிவித்தார். அந்த நிலை வந்தால், மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் என்றும் அவர் கூறினார். எங்கு அவரது தேவை இருக்கிறதோ, அங்கு பிரியங்கா நேரில் சென்று செயல்படுவதாகவும், அதற்காக அவர் கடுமையாக உழைப்பதாகவும் அவர் விளக்கினார்.
இதற்கு முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் இம்ரான் மசூத் அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்திராவின் பேத்தி பிரியங்கா என்றும், அவரை நாட்டின் பிரதமராக ஆக்கினால் அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். அந்த கருத்துகள் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரியங்காவின் பிரதமர் பதவி குறித்து ராபர்ட் வாத்ராவும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
