போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 109 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் அரசுக்கு 35,000 ரூபாய் கடன் வழங்கியிருந்த நிலையில், தற்போது அதனை வட்டியுடன் சேர்த்து சுமார் 12 கோடி ரூபாயாக திருப்பிக் கேட்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அவர்கள் வெளியேறினர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1917ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜூம்மாலால் ருதியா என்பவரிடம் இருந்து 35,000 ரூபாய் கடன் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடன் வழங்கப்பட்ட விவரம் ருதியாவின் மகன் உள்ளிட்டோருக்கு தெரிந்திருந்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த விஷயம் நீண்ட காலமாக பேசப்படாமல் இருந்தது.
சமீபத்தில், ஜூம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் தனது குடும்ப ஆவணங்கள் மற்றும் உயில்களை ஆய்வு செய்தபோது, தாத்தா பிரிட்டன் அரசுக்கு வழங்கிய கடன் தொடர்பான அசல் பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல் உலகப்போரின்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க சீஹோர் சமஸ்தான தேவைக்காக இந்த கடன் பெறப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ‘போர்க்கடன்’ என்றும் அழைக்கப்படுகிறது.
1917 ஜூன் 4ஆம் தேதி 35,000 ரூபாய் கடனாக பெற்றதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது. அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது. தற்போதைய மதிப்பில், வட்டியுடன் சேர்த்து இந்த தொகை 12 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொகை இதுவரை திருப்பி வழங்கப்படாததால், அதை மீட்டெடுக்க விவேக் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பிரிட்டன் அரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இறையாண்மை கொண்ட நாடு ஒன்று பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவது சர்வதேச சட்டப்படி கடமை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
