பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு: புதிய இணையதளம், லோகோவை ஜெய்சங்கர் வெளியிட்டார்
புதுடில்லி: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான பிரத்யேக இணையதளம், லோகோ மற்றும் மையப் பொருளை எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பே ‘பிரிக்ஸ்’ ஆகும். 2024ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைந்தன. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்தோனேஷியா உறுப்பினராக சேர்ந்தது.
தென் அமெரிக்க நாடான பிரேசில்ல் கடந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், இந்தாண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு இறுதியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய இணையதளம், லோகோ மற்றும் மையப் பொருளை பா.ஜ., மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான ஜெய்சங்கர் வெளியிட்டார்.
தாமரை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தேசியக் கொடிகளில் காணப்படும் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் நடுப்பகுதியில், இந்திய பாரம்பரிய முறையான கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் வகையில் லோகோ அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தலைமையின் கீழ் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை புதிய இணையதளம் வழங்கும் என தெரிவித்தார். லோகோவில் அனைத்து உறுப்பு நாடுகளின் வண்ணங்களும் இடம்பெற்றுள்ளதால், அது கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒற்றுமை மற்றும் சமமான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
மேலும், இந்தியாவின் தலைமையின் கீழ், மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதில் இந்த கொள்கைகளே பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
