அம்மான்:
ஜோர்டான் நாட்டுக்கு அரசுப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா, அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக, அவர் நேற்று ஜோர்டான் சென்றடைந்தார். விமான நிலையத்தில் ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன், பிரதமர் மோடியை வரவேற்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அவரது அரண்மனையில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், இன்று (டிசம்பர் 16) பிரதமர் மோடியை, ஜோர்டான் பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா, அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
மேலும், இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
