புதுடில்லி: டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாடு, தலைநகர் டில்லியில் கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
மனிதவள மேம்பாடு, சமூக முன்னேற்றம், பாதுகாப்பான ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட ஏழு முக்கிய துறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக டில்லி வந்த சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்தார். சந்திப்பின் போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
மாநாட்டின் நிறைவு நாளான 20ம் தேதி நடைபெறும் அமர்வில் சுந்தர் பிச்சை உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இந்திய வருகை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்த சுந்தர் பிச்சை, ஏஐ மாநாடு தொடர்பான செய்தித்தாள் விளம்பரப் பக்கத்தையும் பகிர்ந்தார். தனது பதிவில், மாநாட்டில் பங்கேற்க மீண்டும் இந்தியா வந்ததில் மகிழ்ச்சி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஏஐ மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்யையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
