கோலாலம்பூர்: பிரதமர் பதவிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே காலவரம்பு விதிக்கும் அரசியல் சாசனத் திருத்த மசோதாவை மலேசியா அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்த புதிய திருத்தத்தின் படி, ஒருவர் தனது வாழ்நாளில் மொத்தம் 10 ஆண்டுகள் மட்டுமே பிரதமராக பதவி வகிக்க முடியும். இந்த விதி தற்போதைய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களுக்கும் பொருந்தும். அதன்படி, அவர் 2032ஆம் ஆண்டுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது.
மேலும், 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் பிரதமரும், அவரது அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்படுவார்கள். புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர்கள் தற்காலிக அரசாங்கமாக செயல்படுவார்கள் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரம் ஓரிடத்தில் குவிவதைத் தடுக்கவும், ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தவும் மலேசிய அரசின் ‘மடானி’ சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாக அமைய பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். வரும் மார்ச் 3ஆம் தேதி மசோதா மீதான இரண்டாம் கட்ட விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மகாதிர் முகமது போன்ற தலைவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
