கனடா பிரதமர் மார்க் கார்னி, பிப். 26ம் தேதி இந்தியா வருகிறார். இது அவரது முதல் இந்திய பயணமாகும்.
பிப். 26 முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மார்க் கார்னி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது பொருளாதாரம், எரிசக்தி, யுரேனியம் வினியோகம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த பயணத்தை கனடா அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்துவார்கள் என கனடா அரசு கூறியுள்ளது.
மேலும், கனடாவில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தொழிலதிபர்களையும் மார்க் கார்னி சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்த போது, காலிஸ்தான் தொடர்பான விவகாரத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இருநாட்டு உறவில் சிக்கல்கள் ஏற்பட்டன. புதிய பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, அந்த உறவில் ஏற்பட்ட பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
