சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் சூழல் மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் பல முனை போட்டிகள் இருந்தாலும், அது பலம் பொருந்திய போட்டியாக இல்லை என்றார்.
தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அவர் பேசுகையில், “11.19 சதவீத வளர்ச்சியை சாதித்திருப்பது தமிழகத்தின் தனித்துவத்தை காட்டுகிறது. ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சிக்கும் மதிப்பு தராத அரசு மத்தியில் உள்ளது,” என்றார். தி.மு.க. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மற்ற மாநிலங்களில் அரசியல் அழுத்தம் மற்றும் மிரட்டல் அரசியல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், “அதே நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன,” என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பை விமர்சித்த அவர், “ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களை மிரட்டி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது,” என கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடந்த சோதனைகள் மற்றும் விசாரணைகளை நினைவுபடுத்திய அவர், தற்போது சில வழக்குகள் முன்னேறாமல் தடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். “அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் வாயிலாக அரசியல் அழுத்தம் கொடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன,” என்றார்.
பா.ஜ. குறித்து அவர் திட்டவட்டமாக கூறுகையில், “அவர்கள் எந்த வகை அரசியல் அழுத்தத்தையும் கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார். தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல், ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய தலைவர்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வருவது தங்களுக்கு அரசியல் பலமாக அமையும் என்றும் குறிப்பிட்டார். ‘இண்டி’ கூட்டணி தலைமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “என் நிலை மற்றும் பொறுப்பு எனக்கு தெரியும்,” என கூறினார்.
