பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி கவலை
புதுடில்லி:
பாரம்பரிய மருத்துவத்திற்கு உரிய அளவிலான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்திய பாரம்பரிய மருத்துவம் தொடர்பான 2-வது உலக மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, டில்லியில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தையும், அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமுடன் இணைந்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாரம்பரிய மருத்துவத் துறையில் உலகம் முழுவதும் இருந்து வந்த வல்லுநர்கள் இங்கு பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டுள்ளதாக கூறினார். இத்தகைய கலந்துரையாடல்களுக்கு இந்தியா ஒரு வலுவான மேடையை வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதில் உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் இந்தியாவின் ஜாம்நகரில் நிறுவப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும், முதல் பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாட்டின் போது இந்த பொறுப்பை உலக நாடுகள் இந்தியாவிடம் மிகுந்த நம்பிக்கையுடன் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த உச்சி மாநாட்டின் வெற்றி, உலகளாவிய பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட பிரதமர், பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவித்தார். யோகா உலகிற்கு ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை வழங்கியுள்ளதாகவும், இந்தியாவின் முயற்சிகள் மற்றும் 175-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததாகவும் நினைவூட்டினார். யோகாவை மேம்படுத்துவதற்காக பங்களித்த அனைவருக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
பாரம்பரிய மருத்துவம் தற்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், உலக மக்கள்தொகையில் ஒரு பகுதி இதனை சார்ந்திருப்பினும், இதற்கு தகுந்த அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். அதனால், அந்த திசையில் நம்பிக்கையை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், பாரம்பரிய மருத்துவம் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள், இந்த துறையில் முன்னேற உலகம் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
