கோவை:
வரும் சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜ உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். அமைச்சரவை குறித்த முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகே எடுக்கப்படும். வெற்றி பெற்ற பிறகு தான் யார் அமைச்சர் என்பதைக் குறித்து பேச முடியும். இப்போதே அமைச்சர் பற்றி பேசுவது பொருத்தமல்ல,” என்றார்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் பாஜ இதுவரை எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், கூட்டணியில் பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வரும் தேர்தலில் பாஜவின் உறுப்பினர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டசபைக்கு செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இபிஎஸ் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு கட்சியாக கூட்டணியில் இணைந்து வருவதாகவும், முதல்கட்டமாக அன்புமணி வந்துள்ளதாகவும் கூறினார்.
“பொங்கல் முடிந்த பிறகு அரசியல் சூழல் மேலும் தெளிவாகும். தை பிறந்தால் வழி பிறக்கும்,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
