பாஜ – ஏ.ஆர்.ரஹ்மான் இடையே பிரச்னை இல்லை: கனிமொழி கருத்துக்கு அண்ணாமலை பதில்
சென்னை:
பாஜவுக்கும் இசையமைப்பாளர் **ஏ.ஆர்.ரஹ்மான்**க்கும் எந்தவித விரோதமும் இல்லை என்றும், அவருடைய கருத்து அவருடையது; அதனை அரசியலாக்க முயல்வது தேவையற்றது என்றும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, துணை முதல்வர் உதயநிதி தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்திருப்பதை நினைவூட்டினார். அந்த கண்டனத்துக்குப் பிறகு, உதயநிதி துணை முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உதயநிதியின் பேச்சு இனப்படுகொலைக்கு ஆதரவானதாகும் என நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு
கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கறிக்கோழி விவகாரத்திற்கும் திமுக அரசே காரணம் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியை முழுமையாக பார்த்ததாக கூறிய அவர், அதில் இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்து தேவையில்லாமல் பிரச்னை உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.
இசை உலகின் பெருமை
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசைமேதை என்றும், தமிழத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் திகழ்கிறார் என்றும் அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.
இந்தியாவிலிருந்து இசையமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்றவர் ரஹ்மான் ஒருவரே என்றும், அவர் எங்கு சென்றாலும் தமிழில் பேசுவதை பெருமையாகக் கருதுவதாகவும் கூறினார்.
“எல்லாப் புகழும் இறைவனுக்கே” என சொல்லி தன்னை உயர்த்திக் கொள்ளாத குணம் கொண்டவர் ரஹ்மான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து சொல்ல உரிமை
ரஹ்மான் தெரிவித்த கருத்து சினிமா துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிய பார்வை மட்டுமே என்றும், அதனை அரசியல் பின்னணியுடன் இணைப்பது தவறானது என்றும் அண்ணாமலை கூறினார்.
ரஹ்மான் பாஜவின் பின்னணியில் இருப்பதாக எங்கும் கூறவில்லை என்றும், முழுப் பேட்டியையும் பார்த்தபின் இதனை உறுதியாக சொல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், ரஹ்மான் தற்போது உலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, ரஹ்மான் எல்லா வகை படங்களுக்கும் இசை அமைக்கும் படைப்பாளி என்றும் கூறினார்.
கலைஞர்களை காயப்படுத்த வேண்டாம்
ஒருவரின் கருத்துக்கு எதிராக இருப்பதற்காக அவரை தாக்குவது சரியல்ல என்றும், கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தில் இயல்பானவை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
ரஹ்மான் விளக்கம் அளித்த பிறகு இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தான் பார்க்கிறேன் என்றும், கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களை புண்படுத்த வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
“நான் இளையராஜாவை எவ்வளவு மதிக்கிறேனோ, அதே அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானையும் மதிக்கிறேன். நான் அவருடைய ரசிகன்,” என அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் திமுக எம்பி **கனிமொழி**க்கு என்ன பிரச்னை என்பது புரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கனிமொழி கருத்து
இதனிடையே கனிமொழி வெளியிட்ட பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்தார்.
மதம், மொழி, அடையாளங்களை தாண்டிய கலைஞரான ரஹ்மானை குறிவைத்து தாக்குவது கவலையளிப்பதாகவும், இந்தியாவின் இசை, கலாசாரம் மற்றும் விழுமியங்களை உலகிற்கு எடுத்துச் சென்ற தூதராக ரஹ்மான் திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு ஜனநாயக சமூகத்தில் இடமில்லை என்றும் கனிமொழி கூறினார்.
