பாக்., பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம் – ஐநாவில் இந்தியா திட்டவட்டம்
நியூயார்க்:
பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு வலிமையுடன் எதிர்கொள்ளும் என, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தெளிவுபடுத்தினார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், ஜம்மு–காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்து வருவதாக வலியுறுத்தினார். உலகளவில் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியா 65 ஆண்டுகளுக்கு முன் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக நினைவூட்டிய பர்வதனேனி ஹரிஷ், அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருவதாக கூறினார். மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது பாகிஸ்தான் தொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 26 பேர் உயிரிழந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் முடிவுக்கு வரும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாகிஸ்தானால் தூண்டப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரை சிறையில் அடைப்பது, அரசியல் கட்சியைத் தடை செய்வது மற்றும் அரசியலமைப்பை மாற்றி பாதுகாப்புப் படைத் தளபதிக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டின் நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
பாகிஸ்தான் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.
