பாகிஸ்தான்–சீனா ஒப்பந்தத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
புதுடில்லி: காஷ்மீரின் ஷக்சகம் பள்ளத்தாக்கு பகுதி தொடர்பாக பாகிஸ்தான்–சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தம் செல்லாது; அது சட்டவிரோதமானது என உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சியாச்சின் பனிமலைப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஷக்சகம் பள்ளத்தாக்கு, இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில் உள்ளது. காஷ்மீரை ஆக்கிரமித்த பாகிஸ்தான், 1963 மார்ச் 2ஆம் தேதி எல்லை தொடர்பாக சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த ஷக்சகம் பகுதியை சீனாவுக்கு வழங்கியது. இதற்கு அப்போதே இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
எதிர்ப்பு
இந்நிலையில், அந்த பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங், ஷக்சகம் பள்ளத்தாக்கு சீனாவுக்கே சொந்தமானது என்றும், தங்களது நிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முழு உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான்–சீனா இடையிலான ஒப்பந்தம் இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதால் அது சட்டப்பூர்வமானது எனவும் அவர் கூறியிருந்தார்.
அங்கீகாரம் இல்லை
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஷக்சகம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், 1963ஆம் ஆண்டு சீனா–பாகிஸ்தான் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானதும் செல்லாததுமாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் கூறியுள்ளது.
ஏற்க மாட்டோம்
இதுகுறித்து ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறுகையில், 1963ஆம் ஆண்டு ஷக்சகம் பகுதியை சீனாவுக்கு வழங்கும் வகையில் பாகிஸ்தான் மேற்கொண்ட ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றும், அது செல்லாது என்றும் தெரிவித்துள்ளார். ஷக்சகம் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்றும், பாகிஸ்தான்–சீனா பொருளாதார வழித்தட திட்டம் கவலைக்குரியது என்றும் கூறினார். அந்த திட்டம் சட்டவிரோதமான வகையில் இரு நாடுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே கருத முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
