சண்டிகர்: இந்தியா தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பி வந்ததாக, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுவனை, பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனை ஆய்வு செய்ததில், முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் பகிரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்திய ராணுவத்தின் இயக்கங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வழங்கியுள்ளதுடன், போதை மருந்து கடத்தல்காரர்களுடனும் அந்த சிறுவன் தொடர்பில் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பதன்கோட் எஸ்.எஸ்.பி. தில்ஜிந்தர் சிங் தில்லான் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களுடன் அந்த சிறுவன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற அந்த சிறுவன், பிடிபடாமல் இருந்திருந்தால், பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியிருப்பான் என்றும் அவர் கூறினார்.
இதேபோன்று, பாகிஸ்தான் தொடர்புடைய பயங்கரவாத வலையில் மேலும் சில சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
