பாகிஸ்தானில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான பேரரசு நாணயங்கள் கண்டெடுப்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான பேரரசு காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில், குஷான பேரரசைச் சேர்ந்த பழமையான வெண்கல நாணயங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நாணயங்கள், குஷான பேரரசின் கடைசி பேரரசர்களில் ஒருவரான மன்னர் வாசுதேவாவின் ஆட்சிக்காலமான கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தட்சசீலம் அருகிலுள்ள பீர்மவுன்ட் பகுதியில் விலைமதிப்பற்ற லேபிஸ் லாசுலி எனப்படும் நீலக்கல் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்களைவிடவும் அதிகமான தொன்மை கொண்டவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட வெண்கல நாணயங்களில் ஒருபுறம் மன்னர் வாசுதேவாவின் உருவமும், மறுபுறம் ஒரு பெண் தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குஷான மன்னர்கள் ஒரே மதத்தை மட்டுமே பின்பற்றாமல், பல்வேறு மதங்களை மதித்து போற்றியிருந்தனர் என்பது வெளிப்படுகிறது.
குஷான நாணயங்களில் இந்திய, ஈரானிய, கிரேக்க மற்றும் புத்த மத தெய்வங்களின் உருவங்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்புகள், தட்சசீலம் ஒருகாலத்தில் உலகளாவிய வணிக மற்றும் கலாசார மையமாக திகழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன.
தட்சசீலம், அந்நேரத்தில் மவுரிய பேரரசின் தலைநகராக இருந்த பாடலிபுத்திரம் (இன்றைய பீஹார் மாநிலம் பாட்னா) உள்ளிட்ட பகுதிகளுடன் கலாசார மற்றும் வணிக பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தது. கனிஷ்கர் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், தட்சசீலம் முக்கிய நிர்வாக மையமாகவும், கிரேக்கம், பாரசீகம் மற்றும் இந்திய கலைகள் இணைந்த காந்தார கலை வளர்ச்சிக்கும் அடிப்படையாகவும் விளங்கியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
