புதுடில்லி: டில்லியின் மஜ்னு கா திலா பகுதியில் வசித்து வரும் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த 250 தலித் ஹிந்து குடும்பங்களை வெளியேற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், “வெறும் குடியுரிமை வழங்குவது மட்டும் போதுமானதல்ல; கண்ணியமான வாழ்விடத்தை உறுதி செய்வதும் அரசின் கடமை” என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
டில்லியில் சிக்னேச்சர் பாலம் அருகே அமைந்துள்ள மஜ்னு கா திலா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த 250 தலித் ஹிந்து குடும்பங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்களை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த இந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது கவலை அளிக்கிறது” என குறிப்பிட்டனர்.
மேலும், “குடியுரிமை என்பது வெறும் காகித ஆவணமாக மட்டுமே இருக்கக் கூடாது. அந்த மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், மறுவாழ்வு மற்றும் முறையான வீட்டு வசதி திட்டங்கள் இணைந்து வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தனர்.
இதையடுத்து, மஜ்னு கா திலா பகுதியில் எவ்வித வெளியேற்ற நடவடிக்கைகளோ அல்லது கட்டுமானப் பணிகளோ மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
