பழையது கழிந்து புதியது வர வேண்டும்: திருச்சியில் மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை பேச்சு
திருச்சி: பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும்; புதியது எப்போதும் வர வேண்டும் என, திருச்சியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பேசினார்.
திருச்சியில் பாஜ சார்பில் நடைபெற்ற ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு பாஜவே காரணம். உலக வரலாற்றில் எந்த நாகரிகத்திலும் இல்லாத சிறப்பு தன்மை பொங்கல் விழாவுக்கு உள்ளது. மனித நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தைப் பார்க்கும் போது, பழையது கழிந்து புதியது வர வேண்டும். நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் விழா, தமிழர் கலாச்சாரத்தில் மட்டுமே தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. பாஜ கட்சி கடந்த சில ஆண்டுகளாக ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில் மக்களுடன் இணைந்து இந்த விழாவை கொண்டாடி வருகிறது.
மாதம் ரூ.1000
இது அரசியல் மேடை அல்ல. இருந்தாலும் ஒன்று சொல்ல வேண்டும். ஒரு காளை வளர்ப்பவர்களுக்குத்தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். திமுக, 2021 தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவோம் என்று கூறியது.
நியாயப்படி பார்த்தால், அந்த கணக்கில் இன்றைக்கு ஒரு காளை வளர்ப்பவருக்கே ரூ.48 ஆயிரம் வரை கிடைக்க வேண்டும். காளை வளர்க்கும் அனைவருக்கும் அந்த உதவி வழங்கப்பட வேண்டும்.
வாக்குறுதிகள்
அப்படி கூறிவிட்டு நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. திமுக ஆட்சியும் முடிவுக்கு வரவிருக்கிறது. காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவோம் என்று கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின், காளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அரசு பாதுகாப்பாக இல்லை.
அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்த பொங்கல் விழாவில், முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளாக இதைச் சொல்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
