இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பலூச் விடுதலைப் படையினரை எதிர்த்து போராடுவதில் பாதுகாப்புப் படைகள் செயலிழந்துள்ளன என்பது உண்மைதான் என அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி, அங்கு பலூச் இன மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவர்களின் ஆயுத அமைப்பான பலூச் விடுதலைப் படை (பி.எல்.ஏ.,) அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த வாரம், பி.எல்.ஏ., வீரர்கள் பலுசிஸ்தானில் போலீஸ் ஸ்டேஷன்கள், சிறைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து, ஒரே நேரத்தில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக பி.எல்.ஏ., தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில், 177 பி.எல்.ஏ., வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. இருதரப்புக்கு இடையே நடந்த மோதல்களில், பொதுமக்களில் 33 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பாக்., பார்லிமென்ட்டில் பேசிய ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், பலுசிஸ்தான் விடுதலைப் போராட்ட வீரர்களை எதிர்கொள்வதில் உள்ள கடும் சவால்களை விளக்கினார்.
அவர் கூறியதாவது:
பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மொத்த பரப்பளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை கொண்டுள்ளது. இதனால், அந்த பகுதியை முழுமையாக கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. அங்கு பரந்த பாலைவனங்கள் மற்றும் மலைப்பகுதிகள் இருப்பதால், பாதுகாப்புப் படைகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.
ராணுவத்தை விட மேம்பட்ட ஆயுதங்களை பி.எல்.ஏ., வீரர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பொதுமக்களை கொன்ற பயங்கரவாதிகளுடன் அரசு எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
