பலுசிஸ்தானில் 40 மசூதிகள் இடிப்பு – பாகிஸ்தான் மீது பலுச் தலைவர் கடும் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்:
பலுசிஸ்தான் மாகாணத்தில் இதுவரை 40 மசூதிகளை பாகிஸ்தான் அரசு இடித்துள்ளதாக, பலுசிஸ்தான் போராட்ட இயக்கங்களின் முக்கிய தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான மிர் யார் பலுாச் குற்றம்சாட்டியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என, பல்வேறு பலுச் அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மசூதிகளை இந்தியா கண்காணித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், மிர் யார் பலுாச் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதிகளை திட்டமிட்டு இடித்து வருகிறது. இதுவரை குறைந்தது 40 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. மசூதிகள் மீது நேரடியாக குண்டு வீசுதல், குர்ஆன் பிரதிகளை எரித்தல், மசூதி தலைவர்களை கடத்தல் போன்ற செயல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டு வருகின்றன.
சொந்த நாட்டில் உள்ள மசூதிகளை அழித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கு மதப் பாதுகாப்பு குறித்து பாடம் எடுக்க எந்தத் தகுதியும் இல்லை. பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானை ஆக்கிரமித்த போது, கலாட் மன்னரின் மசூதி மீது பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கான சாட்சிகள் இன்றும் அங்கு உள்ளன; அவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்லாமிய விரோத போக்கை வெளிப்படுத்துகின்றன.
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. அந்நாட்டில் வாழும் ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒடுக்க, ஜிகாதி அமைப்புகளை பாகிஸ்தான் அரசு ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒரு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலேயே மசூதிகள் இடிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார், சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
