இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, ‘பலுலூச் விடுதலைப்படை’ (BLA) என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பலுசிஸ்தான் முழுவதும் ஒரே நேரத்தில் பல இடங்களில் தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டா, நுஷ்கி, மஸ்துங், மக்ரான், சமான், நசீராபாத் உள்ளிட்ட 12 இடங்களில், ‘ஆப்பரேஷன் ஹெரோப்’ என்ற பெயரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டனர். போலீஸ் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் சிறைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடும், வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. நசீராபாத் மாவட்டத்தில் ரயில் பாதையில் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
குவெட்டாவில் நடைபெற்ற ஒரு தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், அதில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட, கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பல பகுதிகளில் பதற்றம் அதிகரித்து, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து தீவிர எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 70 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது, போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
