இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் சீனா தனது ராணுவப்படைகளை நிலைநிறுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என பலுச் தலைவர் மிர்யார் பலூச், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக அடக்குமுறைகளை சந்தித்து வரும் பலுசிஸ்தான் மக்கள், இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை பாராட்டியுள்ளதாகவும், பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பலுச் பிரபல தலைவர் மிர்யார் பலூச் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில், பலுசிஸ்தான் பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் மனித உரிமை மீறல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மாதங்களுக்குள் பலுசிஸ்தான் பகுதியில் சீனா தனது ராணுவப்படைகளை நிலைநிறுத்தக்கூடும் வாய்ப்பு உள்ளதாகவும், இது அந்தப் பிராந்தியத்திற்கும் இந்தியாவிற்கும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும், பிராந்திய இறையாண்மையை பாதுகாக்கவும் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
