2026 சட்டசபைத் தேர்தலில் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான் இருக்கும் என, விஜய் தலைமையிலான தவெக தரப்பு தற்போது வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இந்த கருத்தை மிதமாக வெளிப்படுத்திய விஜய், தற்போது அதை தெளிவாக முன்வைத்து வருகிறார்.
ஒருபுறம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் அவர் முன்வைக்கவில்லை. மறுபுறம், அந்த இருவரால் உருவாக்கப்பட்ட வலுவான ஓட்டு வங்கியுடன் இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது போல் செயல்படுவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில், திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசுவதன் மூலம், “திமுகவின் பிரதான எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று தவெகதான்” என்ற படிமத்தை உருவாக்க விஜய் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், விஜயின் கருத்துகளுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுக்கு எதிராக பலம் வாய்ந்த போட்டியாளர்கள் யாரும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாக பிரதான போட்டியாளராக இருந்த அதிமுக தற்போது பலவீனமாக இருந்தாலும், இன்றளவும் அதிமுகவையே பிரதான எதிர்க்கட்சியாக திமுக பார்க்கிறது என்றும் உதயநிதி கூறினார். அதேபோல், பா.ஜ.க. மற்றும் அதன் ‘பி டீம்’ கட்சிகளை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
