புதுடில்லி:
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அளித்த புகாரின் பேரில், ஹரியானாவின் பரிதாபாத்தில் செயல்பட்டு வரும் அல் பலாஹ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக் ஆகியோரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி, செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட டாக்டர்கள், ஹரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்ததை அடுத்து, அங்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மாணவர்களிடம் சட்டவிரோதமாக நிதி வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், என்ஏஏசி மற்றும் யுஜிசி அங்கீகாரம் இருப்பதாக பொய்யான தகவல்களை அளித்து, 415 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டதுடன், 140 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், யுஜிசி அளித்த புகாரின் பேரில், டில்லி குற்றப்பிரிவு போலீசார் ஜாவத் அகமது சித்திக்கை மீண்டும் கைது செய்துள்ளனர். மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
